அமீரகப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்திய ஒன்றியத்தின் தலை நகராம் புதுடெல்லியை நோக்கி அமைகிறது.
டெல்லி பயணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-
டெல்லிக்குச் சென்று, மார்ச் 31 அன்று பிரதமர் நரேந்திர மோடியையும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க இருக்கிறேன்.
தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்க இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது.
அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள கழக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2-ம்நாள் திறக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நமது கழகத்திற்கு அலுவலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. காலம் கனிந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் அறிவாலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.