தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து, சென்னை, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, ராமநாதபுரம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வடிய இடமின்றி தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் நேற்று காலை மழைக்கான அறிகுறியுடன் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் கருமேகம் விலகி, சூரியன் தலை காட்ட தொடங்கியது. பின்னர் மாலை வரையிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தநிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) மிக கன மழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 1-ந் தேதி (இன்று) முதல் 2-ந் தேதி (நாளை) வரை டெல்டா மாவட்டங்கள் (தஞ்சை, திருவாரூர், நாகை) புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ (மிக கன மழை அதாவது 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்) விடுக்கப்பட்டு உள்ளது. அதாவது மேற்கண்ட மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
குமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
3-ந் தேதி, 4-ந் தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்படுவதால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று, சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 3-ந் தேதி வரை சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 4-ந் தேதியன்று, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நன்னிலம், திருவாரூர், மணமேல்குடியில் தலா 5 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தேவகோட்டை, காரைக்குடி, ராமேசுவரம், மண்டபத்தில் தலா 4 செ.மீ. மழையும், திருவாடானை, ஸ்ரீபெரும்புதூர், அறந்தாங்கி, தொண்டி, திருப்பூண்டி, வேதாரண்யம், குடவாசல், தஞ்சை, குமரி, தாமரைப்பாக்கம், அரிமளம், கொள்ளிடம், பொன்னேரி, கொட்டாரம், தரங்கம்பாடி, பட்டுக்கோட்டை, கல்லந்திரியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.