தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. 31-ந்தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது.
2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நாளை (4-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் இன்று தலைகாட்டியது. இதையடுத்து 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்ததால் குழிகள் உள்ள பகுதிகளில் கற்கள் போட்டு நிரப்பப்படுகின்றன. இடைவிடாத மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் இன்று வழக்கம்போல பணிகளை மேற்கொண்டனர்.