Tamilசெய்திகள்

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரிக்கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. தேனி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது. அதன்படி இந்த மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை மிக கனமழை பெய்தது.

இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கு மத்தியில் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்காக ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தேனி, நீலகிரி திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தில் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கட லோரப் பகுதிகள், அதையொட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல் அரபிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.