வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாச மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.