தமிழகத்தின் 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கும் அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இ.டி.சி. எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டது.
இது தவிர வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி வரை ’12-டி’ படிவத்தை வீடு வீடாக வழங்கினர். பின்னர் அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கடந்த 8-ந்தேதி முதலும், போலீசாரிடம் கடந்த 11-ந்தேதி முதல் 137 பேர் வரையிலும் தபால் வாக்கு பெறும் பணி நடந்தது.
திருச்சி கலை அரங்கம் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியிலிருந்து மாநிலம் முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்பட்டது. 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருச்சியில் வைக்கப்பட்டு தபால் வாக்கு பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டார்.