தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 34.19 செ.மீ. மழை பதிவாகும். இது இயல்பான மழை அளவாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக அளவு மழையை பெறும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஓரளவு நல்ல மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் இயல்பை விட மழை குறைவாக பதிவாகி இருக்கிறது.
இந்த 2 மாவட்டங்களை தவிர, மற்ற 36 மாவட்டங்களிலும் இயல்பை விட மழை அதிகமாகவே பெய்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பருவமழை நிறைவடைய இன்னும் 2 மாதங்கள் முழுமையாக உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை 9.5 செ.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். தற்போது 75 சதவீதம் அதிகமாக, அதாவது 16.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வருகிற 24-ந்தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘புழல், அம்பத்தூர் தலா 4 செ.மீ., பெரம்பூர் 3 செ.மீ., வால்பாறை, சென்னை நுங்கம்பாக்கம், தேவாலா தலா 2 செ.மீ. உள்பட ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.