Tamilசெய்திகள்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கொரோனா – சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்வு

தமிழகத்தில் நேற்று புதிதாக 686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 347 பேர் ஆண்கள், 339 பேர் பெண்கள். சென்னையில் அதிகபட்சமாக 294 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது நேற்று முன்தினத்தை விட குறைவாகும். நேற்று முன்தினம் சென்னையில் 306 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

சென்னையில் இதுவரை 7 லட்சத்து 55 ஆயிரத்து 512 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் நேற்று 129 பேரும், திருவள்ளூரில் 50 பேரும், கன்னியாகுமரியில் 47 பேரும், காஞ்சிபுரத்தில் 35 பேரும், கோவையில் 24 பேரும், தூத்துக்குடியில் 14 பேரும், மதுரையில் 13 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 61 ஆயிரத்து 560 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மட்டுமே நேற்று கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. 8 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை. நேற்று கொரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் இல்லை. 257 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,951 ஆக உயர்ந்தது.

சென்னையில் அதிகபட்சமாக 1,883 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செங்கல்பட்டில் 783 பேரும், கோவையில் 204 பேரும், திருவள்ளூரில் 203 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 208 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டன.