ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த உலக கைகழுவும் தினத்தையொட்டி கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, முறையாக கைகளை கழுவாமல் இருப்பதுதான். சோப்பு போட்டு நல்ல முறையில் கைகளை கழுவுவதால் 70 சதவீதம் நம்மால் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.
ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.