Tamilசெய்திகள்

தமிழகத்தின் 22 இடங்களில் நடந்த வருமானவரி சோதனை – ரூ.5 கோடி பணம் பறிமுதல்

கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ரூ.5 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனை குறித்து, டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்கள் என, மொத்தம் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கடந்த 28-ந்தேதி சோதனையை தொடங்கினர்.

கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் பெற்ற கட்டணங்கள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்ற தகவலின் பேரில், இந்த சோதனை நடத்தப்படுகிறது.

சோதனையில் கைப்பற்ற ஆதாரங்கள் வாயிலாக, கட்டணங்கள் முறையாக கணக்கு காட்டப்படவில்லை. மாறாக கணக்கில் வராத பணம், அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டு உள்ளது. பின்னர், நிறுவனம் ஒன்றின் மூலமாக, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இதர பங்குதாரர்களான, திருப்பூரை சேர்ந்த கட்டிடக் கலை வல்லுனர் ஒருவரும், ஜவுளி வியாபாரி ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது.

வருமானவரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட, மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல்லை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், தொழிலாளர்களுக்கான கட்டணங்கள், பொருட்கள் கொள்முதல் போன்றவற்றிற்கான செலவுக் கட்டணங்கள் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளன.

இந்த சோதனையில், கணக்கில் காட்டாமல், ரூ.150 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.5 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர சில வங்கிகளில் உள்ள லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளன. தொடர்ந்து வருமானவரி சோதனைகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.