தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்க்கவும், தொண்டர்களை ஈர்க்கவும் ஒவ்வொரு மாவட்ட தலைமைக்கும் தனி அலுவலகம் சொந்தமாக அமைத்திட அக்கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 16 மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் உள்ள வெங்காத்தூரில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பா.ஜனதா தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். விழா நடைபெற்ற இடத்துக்கு அவர் ‘சாரட்’ வண்டியில் அழைத்து வரப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் கட்சி அலுவலக கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர்கள் இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், துணைத்தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
நீங்கள் தந்த வரவேற்பும், உத்வேகமும் தமிழகத்தில் விரைவில் பா.ஜனதா மிக வலிமையான அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்பதையே காட்டுகிறது. தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாடு தமிழக மக்களுக்கானது மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது. தமிழ் கலாசாரம் இல்லாமல், இந்திய கலாசாரம் முழுமை பெறாது.
மனித குலத்தின் தொன்மையான மொழி தமிழ் என்பது சிறப்பு. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியின் மூலம் தமிழகத்தின் புகழை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். தமிழகம் பல்வேறு தொன்மையான கோவில்களை கொண்டுள்ளது. பிரதமர் மோடி தமிழ் மொழி கலாசாரத்தை ஐ.நா.சபையில் பேசியதன் மூலம் தமிழ் மீது பா.ஜ.க. எவ்வளவு அக்கறையுடன் உள்ளது என்பதை காட்டுகிறது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இருக்கிறார். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் பயனாகதான் மீண்டும் பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்த ஸ்டாலின், மற்ற கட்சிகளின் வற்புறுத்தலால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இவர்கள் தமிழக மக்களுக்காக என்ன சாதிக்க போகிறார்கள்? மத்திய அரசு தமிழக மக்கள் நலனை காப்பாற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி செயலாற்றி வருகிறது. தமிழக பா.ஜனதாவின் எதிர்காலம் நம் கையில்தான் உள்ளது. அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள மணவாளநகரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பா.ஜனதா மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாநில மையக்குழு கூட்டம் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ‘உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணியை தொடரலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா?’ என்று நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அதற்கு அவர்கள், கூட்டணியை தொடருவதற்கும், தனித்து போட்டியிடுவதற்கும் சரி பாதியாக ஆதரவு தெரிவித்தனர்.
கருத்துகளை கட்சியின் மேலிடத்தில் தெரிவித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கட்சி நிலைப்பாட்டை மேலிடம் அறிவிக்கும் என்று கூட்டத்தில் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.