X

தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை 6.13 கோடி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொண்டுள்ளது.

2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். இதற்காக திருத்த பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் கமி‌ஷனுக்கு இந்திய தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட் டுள்ளது.அதன்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு இன்று வெளியிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற திருத்த பணிகளின் அடிப்படைகளில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.13 கோடி ஆகும்.

இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பேர். மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 பேர் ஆவர். இந்த பட்டியல் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்பட்டது.

அதிகபட்சமாக சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி மண்டலங்களில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் பெயர் சேர்ப்பது அல்லது திருத்தங்கள் செய்வது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெயரை சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி உதவி அதிகாரிகளிடம் அனைத்து வேலை நாட்களிலும் அளிக்கலாம்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் வருகிற 21, 22-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த முகாம்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணிகளுக்கு 1 மாத காலம் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பிறகு புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி அன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும்.