Tamilசெய்திகள்

தமிழகத்தின் மேகதாது அணை தொடர்பான வழக்கு 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

தமிழக காவிரி தொழில்நுட்பப்பிரிவின் துணைத்தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேகதாது அணை திட்டம் தொடர்பாக, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவையோ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகிய மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார். இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபித்தார். தமிழக அரசின் முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.