X

தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டாலின் இருக்கிறார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஆங்காங்கே சில தவறுகள் நடந்து இருக்கலாம். ஆனால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையும், இரண்டு மாவட்ட செயலாளர்கள் மீது எடுத்த நடவடிக்கையும் இந்திய அரசியலின் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியது.

பல அரசியல் கட்சிகள், பல்வேறு அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், மதசார்பற்ற கூட்டணியை உருவாக்கி மிகப்பெரிய கொள்கை கூட்டணியாக ஏற்படுத்தி உள்ளார்.

இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல, தமிழக மக்களை மட்டுமல்ல இந்திய மக்களையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.

அரசியலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முன்னணியில் இருக்கிறார். இந்த நடவடிக்கையின் மூலம் அவரது பெருமையும், அவரின் பெயரும் இமாலய அளவில் உயர்ந்து நிற்கிறது.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.

தமிழகத்தில், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கு பிறகு தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டாலின் இருக்கிறார்.

மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கை கட்சி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஸ்டாலின் மீது நான் அன்பு வைத்திருக்கேன். தற்போது அதனையும் தாண்டி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். மு.க.ஸ்டாலினை உளமார வாழ்த்துகிறேன்.

தி.மு.க.வில் இளைஞர்கள், பெண்களுக்கும் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அவர்களது செயல்பாட்டிலும் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பார். எந்த தவறும் நடக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஈ.வி.கே. சம்பத் 97-வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ரங்கபாஷ்யம், துணைத் தலைவர்கள் ஆர்.தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, அசன் மவுலானா எம்.எல்.ஏ, மகளிர் அணி தலைவி சுதா மாவட்ட தலைவர் ஜெ. டில்லி பாபு, சிவ ராஜசேகரன், மாநில செயலாளர் ஏ.வி.எம்.‌ஷரீப், அகரம் கோபி, மயிலை தரணி, மணிபால், சக்தி சிவகுமார், சாகுல், நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.