தமிழகத்தின் உரிமைக்காக பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கும் – ஜோதிமணி
கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.
ஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.
தி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.
கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.