தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் – அமைச்சர் கணேசன் தகவல்
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதலமைச்சர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15-ந் தேதி சென்னையில் நடந்த விழாவில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வருகிற 5-ந் தேதி திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.