தபால் துறை தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது – ப.சிதம்பரம் கண்டனம்

திருவண்ணாமலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் அரசை கவிழ்ப்பது அல்லது மாற்று கட்சியினரை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுப்பது என்பது ஜனநாயக படுகொலை. இதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சியா? அல்லது ஜனநாயகத்தை கொலை செய்யும் ஆட்சியா? என மக்கள் தீர்மானிப்பார்கள்.

தபால் துறை தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது என்பது கண்டிக்கத்தக்கது. இந்தியை திணிப்பதற்கு ஒவ்வொரு வாரமும் புது முயற்சி எடுக்கப்படுகிறது. முதலில் மும்மொழி திட்டம் மூலம் கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க பார்த்தனர். பின்னர் ரெயில்வே அதிகாரிகள் இந்தியை தான் பேச வேண்டும் என்று கூறியது.

தபால்துறையில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்றால் இந்தி மொழி பேசும் மக்களுக்கு ஒரு அசாத்தியமான வாய்ப்பு கிடைக்கிறது. இந்தி பேச முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் புலமையும் கிடையாது. அதனால் அவர்களுக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்தியை திணிக்க அரசு மேற்கொள்வது மறைமுக நடவடிக்கையாகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சி என்பது ஓடாத படத்தை 100 நாள் ஓட்டி வைப்பது போல் ஆகும். ஒன்றும் செய்யாத அரசு 100 நாள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news