X

தனுஷ் கடந்து வந்த சினிமா பாதை! – பிறந்தநாள் சிறப்பு

துள்ளுவதோ இளமை’ படம் மூலம் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தனுஷ். இந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றாலும், தனுசிடம் சினிமாவுக்கான முகமும் தோற்றமும் இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதையடுத்து செல்வராகவன் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி விமர்சனங்களை தகர்த்தெரிந்தார் தனுஷ்.

இதையடுத்து கமர்ஷியல் ரூட்டுக்கு மாறிய தனுஷ், சுப்ரமணிய சிவா இயக்கிய ‘திருடா திருடி’ படத்தில் நடித்து முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘மன்மதராசா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதையடுத்து ‘சுள்ளான்’ படத்தில் பரபரக்கும் பஞ்ச் வசனங்களை பேசி மாஸ் ஹீரோவாக உயர நினைத்த தனுஷுக்கு தோல்வியே மிஞ்சியது.

பின்னர் ‘தேவதையைக் கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த தனுஷை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் அது செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ தான். இப்படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.

தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த சம்பவம் என்றால், அது அவர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தது தான். ஏனெனில், தொடக்க காலத்தில் அண்ணன் செல்வராகவன் படங்களில் மட்டுமே தனுஷால் நல்ல நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மனத்தில் பரவி இருந்தது.

இந்த பிம்பத்தை அழித்து தனுஷுக்கு ஒரு அற்புதமான நடிகன் என்ற பிம்பத்தை அளித்ததில் வெற்றிமாறனுக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படம் ’பொல்லாதவன்’. இந்தப் படத்தில் அவர் எந்த அளவு மாஸ் ஹீரோவாக உயர்ந்தாரோ, அதே அளவு அவருடைய நடிப்புத் திறமையும் பளிச்சிட்டது.

பின்னர் ’யாரடி நீ மோகினி’, ’படிக்காதவன்’, ’குட்டி’, ’உத்தமபுத்திரன்’ என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதையடுத்து மீண்டும் வெற்றிமாறனுடன் ‘ஆடுகளம்’ படத்தில் அதகளம் பண்ணிய தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதன்மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற தனுஷுக்கு, பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தன. அங்கும் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ போன்ற படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களையும் வியக்க வைத்தார் தனுஷ்.

இதையடுத்து வேலையில்லா பட்டதாரி, மாரி போன்ற படங்கள் தனுஷின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது. பின்னர் ‘பா பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த தனுஷ், முதல் படத்திலேயே வெற்றியை ருசித்தார். அதுவரை கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த தனுஷ் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படம் மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றார். இப்படம் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது.

இதையடுத்து தனது ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து ‘வட சென்னை’, ‘அசுரன்’ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த தனுஷுக்கு, அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கர்ணன் படம் தனுஷின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது. இவ்வாறு படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்தும் தனுஷ், இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.