பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களிலும் ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த மாளவிகா மோகனன், சமீபத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கொரோனா தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் கொரோனா பாதிப்புக்கு முன்பே படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் தான் மூன்று படங்களில் கமிட் ஆகியிருந்ததால் கைவசம் அவர்கள் கேட்ட தேதி இல்லை என்றும் கூறினார்.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது. இதனை அடுத்து மீண்டும் தனுஷ் படக்குழுவினர் மீண்டும் என்னிடம் அணுகிய போது தன்னிடம் தேதி இருந்ததாகவும், அதன்பின்னரே ஒப்பந்தமானேன் என்றும் கூறியுள்ளார். எனவே தனுஷ் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கொரோனா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.