X

தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ 29 ஆம் தேதி ரிலீஸ்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கவுதம் மேனன் படத்தை நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நவம்பர் 29-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.