X

தனுசு ராசி நேயர்களே- திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ எப்படி என்று பார்ப்போம்.

எதற்கு எடுத்தாலும் ஜோதிடம், ஜாதம் பார்க்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண், தனக்கு வரபோகும் மனைவி கன்னி ராசியாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்ற ஜோதிடரின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து, தன்னை எந்த பெண்ணாவது காதலித்தால் கூட, அவர்களிடம் ராசியை கேட்டு கழட்டிவிடுகிறார். இப்படி தொடர்ந்து பல பெண்களை நிராகரித்து வரும் ஹரிஷின் எண்ணம் போலவே, கன்னி ராசி நேயரான டிகாங்கனா சூர்யவன்ஷி கிடைக்க, இருவர் மனதிலும் காதல் பிறக்கிறது. ஆனால், செவ்வாய் கிரகத்திற்கு செல்வதை தனது லட்சியமாக கொண்டிருக்கும் சூர்யவன்ஷி, அதற்கான தேர்விலும் வெற்றி பெற்றுவிட, ஹரிஷின் காதலை ஏற்க முடியாமல் தடுமாற, ஹரிஷோ சூர்யவன்ஷியை தீவிரமாக காதலிக்க, இருவரையும் ஜாதகமும், ராசியும் ஒன்று சேர்த்ததா அல்லது பிரித்ததா, என்பது தான் படத்தின் கதை.

பெற்றோர்கள் நிச்சயக்கப்பட்ட கல்யாணம் என்றால் ஜாதகம், ராசி, நட்சத்திரம் என அனைத்துமே பார்ப்பார்கள். அதே காதல் கல்யாணம் என்றால் எதையும் பார்க்காமல் இரண்டு மனங்களை மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், காதலிலும் ஜோதிடம், ராசி பார்க்கும் ஒரு மூட நம்பிக்கையுள்ள இளைஞன், அதே ஜோதிடம் ராசியால் தனது மனதுக்கு நெருக்கமானவளை எப்படி இழக்கிறான், என்ற அழகான கதையை, எப்படி எல்லாம் நாசம் செய்ய வேண்டுமோ அப்படி எல்லாம் நாசம் செய்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி.

ஹரிஷ் கல்யாண் என்றாலே டபுள் மீனிங் வசனம் மற்றும் காட்சிகளுக்கு ஏற்ற படங்களுக்கு கச்சிதமாக பொருந்திவிடுவார் என்ற இமேஜை பெற்றுவிட்டார். இந்த படத்திலும் அதுபோன்ற ஒரு வேடத்தில் தான் ஹரிஷ் நடித்திருக்கிறார்.

ரெபா மோனிகா ஜான், டிகாங்கனா சூர்யவன்ஷி என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், ஜப்பான் நாட்டு பெண் சாயலில் இருக்கும் டிகாங்கனா சூர்யவன்ஷி தனது எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் கவர்கிறார்.

யோகி பாபு, முனிஷ்காந்த், கும்கி அஸ்வின், டி.எஸ்.கே என பலர் இருந்தாலும் காமெடி ஏரியா காலியாகவே இருக்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படி இல்லை. பின்னணி இசை படு சுமாராக உள்ளது. ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

பல பெண்களை காதலித்தாலும், இறுதியில் பெற்றோர் மூலம் பார்க்கப்படும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் ஹீரோ, என்ற ஜானரில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அப்படி ஒரு ஜானரில் ஜோதிடம் மற்றும் அதன் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அட்வைஸ் சொல்லும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் சஞ்சய் பாரதி, அதை சொல்லிய விதத்தில் பெரிய அளவில் கோட்டை விட்டிருக்கிறார்.

படத்தில் வரும் காட்சிகள் அத்தனையும் அதற பழசாகவே இருக்கிறது. குறிப்பாக ஹீரோயினை ஈர்ப்பதற்காக அவர் கண்ணை கட்டி கடலுக்கு நடுவே அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் எல்லாம், இன்னும் எத்தனை படங்களில் பார்க்கப் போகிறோமோ.

மொத்தத்தில், ‘தனுசு ராசி நேயர்களே’ அனைத்து ராசிக்கு மட்டும் அல்ல சினிமா ரசிகர்களுக்கே பிடிக்காத படமாக இருக்கிறது.

-ரேட்டிங் 2/5