Tamilசெய்திகள்

தனி ஒருவராக துபாய்க்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த தொழிலதிபர்!

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. எனினும், தூதர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்கான விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவில் இருந்து பயணிக்க அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலபதிபர் எஸ்.பி.சிங் ஓபராய் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை ஏர் இந்தியா விமானத்தில் தனி ஒருவராக துபாய்க்கு பயணம் மேற்கொண்டார்.

எஸ்பி சிங் ஓபராய் ஆசிய கட்கா அறக்கட்டளையின் தலைவரும், அபெக்ஸ் குழும நிறுவனங்களின் நிறுவனரும் ஆவார்.

முன்னதாக, ஒருவர் மட்டுமே முன்பதிவு செய்ததால் அவரது பயணத்தை ரத்து செய்ய ஏர் இந்தியா திட்டமிட்டது.

ஆனால் ஓபராய் அமீரக அரசின் கோல்டன் விசா பெற்றுள்ளதால் அவரது பயணத்துக்கு தடைவிதிக்கவில்லை. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்து துறையின் தலையீட்டைத் தொடர்ந்து, அவரை மட்டும் விமானத்தில் அழைத்துச் செல்ல ஏர் இந்தியா ஒப்புக் கொண்டது.

இதுதொடர்பாக ஓபராய் கூறுகையில், “இந்த பயணம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாதது. முதலில் மகாராஜாவை போல் உணர்ந்தேன். நேரம் செல்ல செல்ல சக பயணிகள் இல்லாததால் சலிப்பு ஏற்பட்டது. அடுத்த முறை இதுபோல் பயணிக்க நேர்ந்தால் மறுத்து விடுவேன். சிறப்பான சேவை அளித்த ஏர் இந்தியாவுக்கு எனது நன்றி” என்றார்.