‘தனி ஒருவன் 2’ பணியில் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கும் மோகன் ராஜா
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.
இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.
தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.