Tamilசெய்திகள்

தனியார் மருத்துவனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தொடங்கியது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக சுகாதாரத்துறை, முன்களப் பணியாளர்களுக்கு இதே தேதியில் தடுப்பூசி போடத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த மே மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதலில் தடுப்பூசி போடுவது மிகவும் மந்தமாக இருந்தது. அதன் பிறகு கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால் தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 80 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 1 கோடியே 73 லட் சத்து 25 ஆயிரத்து 995 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 27 லட்சத்து 53 ஆயிரத்து 892 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

ஆனாலும் கடந்த 2 மாதங்களாக தடுப்பூசி போடும் முகாம்களில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வசதி படைத்தவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பணம் செலுத்தி தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

நடுத்தர மக்கள் தடுப்பூசி முகாம்களில் காத்திருந்து இலவசமாக ஊசி போட்டுக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பொது மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த திட்டமிட்டார்.

அதன்படி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவி மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

அவரது முன்னிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அடையாறு ஆனந்தபவன் உணவகத்தின் சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து இந்த இலவச தடுப்பூசி போடும் திட்டம் காவேரி ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவது போல் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் நாளை முதல் விரிவுப்படுத்தப்படுகிறது.

எந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். பங்களிப்பு எந்த மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் எத்தனை பேருக்கு இலவசமாக தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் ஒவ்வொரு தனியார் மருத்துவமனை வளாகத்திலும் வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல் முறையாக சி.எஸ்.ஆர். பங்களிப்பில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியாவிலேயே முன் மாதிரி முயற்சியாக இது அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நாளை முதல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இத்திட்டம் தொடங்கப்படும். எந்தெந்த தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் அந்தந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். இது பற்றிய விவரங்கள் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் 25 சதவீத கோட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தமாக திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைகள் சார்பில் 107 பிரதிநிதிகளும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 137 மருத்துவ பிரதிநிதிகளும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் சி.எஸ்.ஆர். உடன் இணைந்து இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. தனியார் ஆஸ்பத்திரிகளுடன் சி.எஸ்.ஆர். பங்களிப்பு பணிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி போட உதவுவார்கள்.

எந்தெந்த பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். பங்களிப்பை வழங்க முன் வருகிறார்களோ அங்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சி.எஸ்.ஆர். பங்களிப்புடன் எந்தெந்த மருத்துவமனையில் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்ற விவரம் இணையதளம் மூலம் உடனுக்குடன் வெளியிடவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படும் என்ற விவரம் அறிவிப்பாக வெளியிடப்படும். எல்லா தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படாது.

இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பும் தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.