அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால் மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்? மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.
மத்திய அரசு ஏன் அழுத்தம் கெடுக்கிறது? ஏனென்றால் தயாரிப்பது அவரது (மோடி) நண்பர் அதானி தயாரிக்கிறார். அவருக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக மக்களை வதைக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் உற்பத்திகூட அரசிடம் இல்லை. எல்லாம் தனியர் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம். அது மோசமான பொருளாதார கொள்கை. அதுதான் இலங்கையில் நடந்தது.
அங்கு இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 நாள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த நிலைமை நமக்கு வருவதற்கு முன்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.