X

தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 விலை குறைப்பு!

தமிழ்நாட்டில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தனியார் பால் விலையைவிட ஆவின் பால் விலை எப்போதும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறையில் பால் விற்பனை குறைந்துள்ளது. சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்றதால் தமிழகத்தில் பால் விற்பனை குறைந்தது. மேலும் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் மழையும் பரவலாக பெய்து வருவதால் தயிர், மோர் விற்பனை சரிந்தது. இதனால் பால் தேக்கம் அடைந்தது.

ஓட்டல்கள், நிறுவனங்கள், டீக்கடைகளுக்கு தனியார் பால் அதிகளவில் வினியோகிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்ததால் விடுதிகளுக்கு வாங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதத்தில் பால் விற்பனை 20 சதவீதம் குறைந்ததோடு மட்டுமின்றி தற்போது மழை பெய்து வருவதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பால் கொள்முதல் அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற அளவில் பால், தயிர், மோர் போன்றவை விற்பனை ஆகவில்லை. இதனால் ஹட்சன் நிறுவனம், ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது.
புல்கிரீம் பால் லிட்டர் ரூ.68-ல் இருந்து ரூ.66-ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.37-ல் இருந்து ரூ.36 ஆகவும் குறைந்துள்ளது. அதே போல தயிர் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தயிர் ரூ.71-ல் இருந்து ரூ.67 ஆகவும் 500 மில்லி தயிர் ரூ.32-ல் இருந்து ரூ.30-ஆகவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

தனியார் நிறுவனம் பால் விலையை உயர்த்தும் போது அனைத்து வகை பாலுக்கும் உயர்த்தியது. குறைக்கும் போது நிறை கொழுப்பு பாலுக்கான விலையை மட்டும் குறைப்பது ஏற்புடையதல்ல. மற்ற பால் பாக்கெட் விலையையும் குறைக்க வேண்டும்.
மேலும் இந்த விலை குறைப்பு மிகவும் குறைவாகும். தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் குறைத்துவிட்டு விற்பனை விலையை ரூ.2 மட்டுமே குறைத்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.