கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் பேசியதாக, அவர் மீது சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்.
இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கொடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தாக்கல் செய்த அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கொடநாடு சம்பவத்தில் முதல்-அமைச்சரை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்தார். அத்துடன் மொபைல் போன் மூலம் வீடியோவை நீதிபதியிடம் போட்டு காண்பித்தார்.
மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.குமரேசன், மு.க.ஸ்டாலின் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசுவதாக கூறினார். அதற்கான வீடியோவை நீதிபதியிடம் அவரும் காண்பித்தார்.
அதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நாளை (புதன்கிழமைக்கு) தள்ளிவைப்பதாக உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை யாரும் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.