X

தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு பூங்கொத்து அனுப்பிய கபில் தேவ்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு பேட்டிங்கில் அரை சதம் அடித்தார்.

6 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் சென்னையை சேர்ந்த அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார்.

கபில்தேவ் 434 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வின் 436 விக்கெட்டுகளை எடுத்து அவரை தாண்டி இந்திய வீரர்களில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

இந்தநிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த அஸ்வினை பாராட்டும் விதமாக அவரது வீட்டுக்கு கபில்தேவ் பூங்கொத்து ஒன்றை அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அஸ்வின் அளித்த வீடியோ பேட்டியில் கூறியதாவது:-

கபில்தேவின் சாதனையை முறியடித்தது கனவு போல் உள்ளது. இவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை.

கபில்தேவ் என் வீட்டுக்கு பூங்கொத்து அனுப்பி, கைப்பட வாழ்த்து கடிதத்தையும் அனுப்பி இருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் ரோகித் சர்மா என்னை மிகவும் பாராட்டினார். ஒருநாள் அவர் என்னை அழைத்து பேசினார். அப்போது, “அணியின் கூட்டங்களில் நீ நன்கு பேசுவதற்காக பாராட்டுகிறேன்” என்றார்.

மேலும் அணிக்கு தேர்வாகி விட்டால் ஆடுகளத்தில் அடிப்படை விசயங்களை ஒழுங்காக செய்ய சிரமப்படக்கூடாது என்றும் சொன்னார். இது எனக்கான பாதையை திறந்து விட்டது.

இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.