Tamilவிளையாட்டு

தந்தை திட்டியது போல எடுத்துக்கொள்வேன் – சீனிவாசன் விமர்சனத்திற்கு சுரேஷ் ரெய்னா பதில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பினார். ரெய்னா விலகியது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் மாநிலத்தில் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால் ரெய்னா ஊர் திரும்பியதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

கேப்டன் டோனிக்கு தந்ததை போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாகவும், கொரோனா விதிமுறைகள் காரணமாக அறையை உடனே மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி சிஎஸ்கே அணி உரிமையாளரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன் கூறும்போது, சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நிகழும் என கடுமையாக விமர்சித்தார். அதேசமயம், யாருக்கு பிடிக்கவில்லையோ, யாருக்கு மகிழ்ச்சியில்லையோ அவர்கள் தாராளமாக திரும்பி செல்லலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் டோனியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.

‘இது ஒரு தனிப்பட்ட முடிவு, நான் எனது குடும்பத்திற்காக திரும்பி வர வேண்டியிருந்தது. அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியதை, தந்தை திட்டியது போன்று உணர்கிறேன். சென்னை அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விரும்புகிறேன்’ என்று ரெய்னா கூறி உள்ளார்.

தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன், விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என்றும் ரெய்னா கூறினார்.