Tamilசெய்திகள்

தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது.

இதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்ப தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என கோரினார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பல கட்டங்களாக விசாரித்து வந்த நிலையில், நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘1956-ல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு’ என அறிவித்தனர்.