Tamilவிளையாட்டு

தந்தை இறந்த நிலையிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தீப் சிங் – கே.எல்.ராகுல் பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை வசப்படுத்தியது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 150 ரன் இலக்கை பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கிறிஸ் கெய்ல் (51 ரன்கள், 29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கடந்த வாரம் தனது தந்தை மறைந்தாலும் நாடு திரும்பாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு தொடர்ந்து விளையாடி வரும் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங் (ஆட்டம் இழக்காமல் 66 ரன்) நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘குடும்பத்தினரை விட்டு வெளியூரில் இருக்கும் போது நமக்கு நெருக்கமானவர்களை இழக்க நேரிடுவதுடன், அந்த துயரத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போவது மிகவும் வேதனைக்கு உரியதாகும். அந்த மாதிரியான இக்கட்டான நிலையிலும் மந்தீப் சிங் விளையாடி வருகிறார். அவர் காட்டிய மனஉறுதி அணியில் உள்ள மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவர் இந்த ஆட்டத்தில் ஆடிய விதம் எல்லோரையும் உணர்ச்சி மயமாக்கியது. கடினமான தருணத்திலும் பொறுப்பை ஏற்று விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்து அவருக்கும், அவருடைய தந்தைக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார்.

முதல் கட்ட ஆட்டங்களில் கெய்லை ஆட வைக்காதது கடினமான முடிவு தான். ஏனெனில் அவர் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். ரன் குவிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர். நேர்மறையான எண்ணம் கொண்ட அனுபவசாலியான அவரை போன்றவர்கள் அணியில் இருப்பது சிறப்பானதாகும் என தெரிவித்தார்.