தடுப்பூசி போட ஊக்குவிப்பதற்காக பரிசு அறிவிக்கும் மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களில் சுமார் 82 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 43 சதவீதம் பேர், 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

2-வது டோசுக்கான கால இடைவெளி முடிவடைந்தும், இன்னும் 12 கோடி பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

எனவே, ஒரு டோஸ் கூட போடாதவர்களையும், 2-வது டோஸ் போடாதவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

தடுப்பூசி போடாதவர்களுக்காக மத்திய அரசு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் ஒரு மாத பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

அத்துடன், பணியிடங்களில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு ‘பேட்ஜ்’ வழங்குவது மற்றொரு திட்டமாகும்.

‘‘நான் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவன். நீங்கள் முழுமையாக செலுத்திக் கொண்டீர்களா?’’ என்று அந்த பேட்ஜில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதன்மூலம், சக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவார்கள்.

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பரிசு குலுக்கல் நடத்துவது மற்றொரு வியூகம் ஆகும். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சமையலறை சாதனங்கள், பலசரக்கு பொருட்கள், பயண அனுமதி சீட்டுகள், ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்படும். இதனால், தடுப்பூசி பாக்கி வைத்திருப்பவர்கள், அதற்கு முன்வருவார்கள்.

மாவட்டங்களில் அல்லது கிராமங்களில் 2 டோஸ் போட்டுக்கொண்ட செல்வாக்கான நபர்களை வைத்து, தடுப்பூசி போட ஊக்குவிப்பதும் மற்றொரு வழிமுறை ஆகும். அவர்கள் ‘தூதர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

விரைவில் இந்த திட்டங்களை செயல்படுத்துமாறு மாநிலங்களை கேட்டுக்கொள்வோம்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools