Tamilசெய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது 45-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசி போட்டு வருகிறது. சில மாநிலங்களில் மாநில அரசு சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தற்போது வரை 1000 ஆண்களுக்கு 854 பெண்களே ஊசி போட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மற்றும் கேரளா மாநிலத்தில் மட்டும்தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் ஊசி போட்டு இருக்கிறார்கள். சத்தீஸ்கரில் 1000 பேருக்கு 1045 பெண்களும், கேரளாவில் 1000 பேருக்கு 1087 பெண்களும் ஊசி போட்டுள்ளனர்.

இமாச்சலபிரதேசத்தில் மொத்த பெண்கள் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். நாட்டிலேயே இங்குதான் தடுப்பூசி அதிக சதவீதம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ராஜஸ்தானில் 48 சதவீத பெண்கள் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் போன்றவற்றில் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகவும் குறைவாக உள்ளது.

உத்தரபிரதேசத்தை பொறுத்தவரையில் மொத்தத்தில் 12 சதவீதம் மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அங்கு 1000 ஆண்களுக்கு 746 பெண்களே தடுப்பூசி போட்டுள்ளனர்.

அதேபோல பீகாரில் 1000 ஆண்களுக்கு 810 பெண்களே ஊசி போட்டு இருக்கிறார்கள். காஷ்மீரில் 1000 ஆண்களுக்கு 711 பெண்கள் ஊசி போட்டு இருக்கிறார்கள். தலைநகரம் டெல்லியில் 1000 ஆண்களுக்கு 722 பெண்கள் மட்டுமே தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள்.