X

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா – உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை இன்று 100 கோடியை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட  தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம்.  ஜப்பானை விட 5 மடங்கு, ஜெர்மனியை விட 9 மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியதற்காக பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தியதற்காக இந்திய அரசுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், தடுப்பூசி இலக்குகளை அடையவும் பெரும் முயற்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.