தஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குடமுழுக்கு திருப்பணிகள் மும்முரமாக நடந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த முறை யாகசாலை கோவில் வளாகத்தில் வைக்காமல் பாதுகாப்பு கருதி அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டது. அங்கு 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டது. அதில் 110 குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டன.
யாகசாலை பந்தலில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு கடந்த 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதேபோல் ராஜகோபுர கலசத்தில் தங்கமுலாம் பூசுவதற்காக கடந்த மாதம் 5-ந் தேதி தொல்லியல்துறை, இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கலசம் பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வரப்பட் டது. மேலும் விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகர், வராகி அம்மன் உள்ளிட்ட 7 சன்னதிகளின் கலசங்களும் கழற்றப்பட்டன. இதையடுத்து கலசங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அந்த பணிகள் முடிந்ததையடுத்து கடந்த வாரம் கலசங்கள் அனைத்தும் தொன்மை மாறாமல் பொருத்தப்பட்டன. கலசங்களுக்கு ஊற்றுவதற்காக கங்கை, காவிரி, யமுனா உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் யானை மீது வைக்கப்பட்டு ஊர்வ லமாக பெரிய கோவி லுக்கு எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக விழாக்கள் கடந்த 27-ந் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜை கடந்த 1-ந் தேதி தொடங்கி 2 மற்றும் 3-ந்தேதிகளில் 2, 3, 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 7-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
இன்று கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முதலே தஞ்சை மட்டுமில்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சைக்கு வரத் தொடங்கினர். இதேபோல் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். இன்று காலையில் இருந்தே தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இதேபோல் கோவிலில் குவிந்த முக்கிய பிரமுகர்கள், மிக மிக முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என அவர்கள் வந்த வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவிலுக்கு நடந்து வந்தனர்.
லட்சகணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.
நாடே எதிர்பார்த்த கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையுடன் தொடங்கியது. 335 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் கலந்து கொண்டு ஹோமம் நடத்தினர்.
பின்னர் ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரீதி நடந்தது. இதனை பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர்.
காலை 7 மணி முதல் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கட்டுக் கடங்காத அளவுக்கு காணப்பட்டது. அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு முதலில் திருக்கலசங்கள் எழுந்தருளல் செய்யப்பட்டன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 705 கலசங்களை காலை 7.30 மணியளவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், முக்கிய பிரமுகர்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் தொடங்க தயாரானது. 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்தை காணப்போகிறோமே என மக்கள் பக்தி பரவசத்துடன் காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதியான 216 அடி உயர ராஜ கோபுரத்தின் மீது புனித நீருடன் ஏறினர். பாதுகாப்பு கருதி அவர்களுடன் 2 போலீசார் சென்றனர். அப்போது மேள தாளங்கள் முழக்கப்பட்டது.
ஒவ்வொரு படியாக சிவாச்சாரியார்கள் ஏறிச் சென்றபோது பக்தர்கள் பக்தி கோஷங்களை விண்ணை முட்டும் அளவுக்கு எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ராஜ கோபுரகலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதேபோல் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் நடைபெற்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து பெரிய கோவிலில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அதனை தலைவணங்கி ஏற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வீட்டில் இருந்தபடியே கோடிக்கணக்கான பக்தர்கள் டி.வி.யில் நேரலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்தனர்.
சுமார் 1 மணி நேரம் பக்தி கோஷங்களை மட்டுமே கேட்க முடிந்தது. இதையடுத்து பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ. ராமசந்திரன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்குடமுழுக்கு விழா குழு தலைவர் துரை.திருஞானம், உறுப்பினர்கள் பண்டரிநாதன், காந்தி, புண்ணியமூர்த்தி, சரவணன், அறிவுடைநம்பி, சாவித்ரி கோபால், பரம்பரை அறங் காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு பெரிய நாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேராபிஷேகம் நடைபெறுகிறது. 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா காட்சி நடக்கிறது. இதனை காண்பதற்கும் லட்சகணக்கான பக்தர்கள் பெரிய கோவிலுக்கு வந்தனர். மொத்தத்தில் இன்றைய நாள் தஞ்சை மாநகருக்கு பெருமை சேர்க்கும் நாளாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்த நாளாகவும் இருந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாவட் டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5500 போலீசார் 2 டி.ஐ.ஜி., 10 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை வரை இந்த பாதுகாப்பு தொடர்கிறது.
இன்று காலை நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். லட்சகணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. ஏராளமான பயணிகள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதே போல் குடமுழுக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறப்பு பஸ் மற்றும் ரெயிலில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தஞ்சை ரெயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர தானியங்கு எந்திரம் மூலமும் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. தற்போது குடமுழுக்கையொட்டி கூடுதலாக 3 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. தற்போது 7 டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.
இதனால் பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றியும், கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் உரிய நேரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பயணிகள் தெரிவித்தனர்.