தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது.
இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. 2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது. 3-ம் நாளான 19-ந்தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

4-ம் நாளான 20-ந்தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools