Tamilசெய்திகள்

தஞ்சை தேர் விபத்து நடக்க என்ன காரணம்?

தஞ்சை அருகே களிமேடு பகுதியில் அப்பர் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள், தந்தை, மகன் உள்பட 11 பேர் பலியான சம்பவம்
பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் முதலாவது குற்றமாக தேரோட்டத்திற்கு கோவில் நிர்வாகம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு
பணிகள் துறை அதிகாரி (பொறுப்பு) பானுப்பிரியா கூறியதாவது:-

எந்தவொரு திருவிழாவாக இருந்தாலும் முதற்கட்டமாக முறையான அனுமதியை காவல் துறை, தீயணைப்பு துறையிடம் பெறவேண்டும். ஆனால் இந்த அப்பர் கோவில் திருவிழா மற்றும் தேரோட்டம்
நடத்துவது தொடர்பாக விழாக்குழுவினர் மற்றும் நிர்வாகத்தினர் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தேர் புறப்பட்ட இடமானது மிகவும் குறுகிய தெருவாகும். அங்கிருந்து வந்து பிரதான சாலையில் இணையும் இடத்தில் தான் இந்த மின் விபத்து நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக
கொரோனா கட்டுப்பாடுகளால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் தேரில் அலங்கார பொருட்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தேரின் மேல் பகுதி செல்லும்போது மின்சார எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும்.
ஆனால் யாரும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

அத்துடன் குறுகிய தெருவில் இருந்து பிரதான சாலைக்கு தேர் திரும்பியபோது தேருக்கு முன்னால் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டு புகை
கிளம்பியுள்ளது. அதுவே பெரும் விபத்துக்கு காரணமாகி விட்டது.

அதே சமயம் தேரின் மேல் பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் அலங்கார பொருட்களில் உடனே தீப்பற்றி, அடுத்த விநாடி தேரின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஒரு
சிலர் சுதாரித்துக்கொண்டு தேரில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் காயங்களுடன் தப்பினர்.

மேலும் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தவர்களுக்கு அப்பகுதியினர் வேண்டுதலாக, கால்களில் தண்ணீரை ஊற்றியுள்ளனர். இது மின்சாரம் அவர்களின் உடலில் பரவியதற்கு முக்கிய காரணமாகும்.
விபத்து குறித்து எங்களுக்கு அதிகாலை 3.10 மணிக்கு தகவல் வந்தது.

அடுத்த 5 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே 10 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.