தஞ்சை கோவிலில் ரவிசங்கரின் பயிற்சியை அனுமதிக்க கூடாது – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘வாழும் கலை’ அமைப்பை நடத்திவரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இன்றும், நாளையும் (7, 8-ந்தேதி) தஞ்சைப் பெரிய கோயிலின் உள்ளே ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
வணிக நோக்கம் கொண்ட அத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல் துறையின் ஒப்புதலின்றி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.
தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் கோயிலில் இப்படி தனியார் நிகழ்ச்சி நடத்த சட்டரீதியாக அனுமதி கிடையாது. அதை மீறி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதென்றால் அதிகார உயர் பதவி வகிப்பவர்களின் தலையீடு இல்லாமல் அது நடந்திருக்காது. அப்படி தலையிட்டு அனுமதி வழங்கச் செய்தது யார் என்பதைத் தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும்.
யமுனை நதிக்கரையில் ‘உலகப் பண்பாட்டுத் திருவிழா’ என்று கலாச்சார நிகழ்ச்சி நடத்தியபோது அந்த நதியின் கரையைச் சேதப்படுத்தியதற்காக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த ‘வாழும் கலை‘ அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலையும் பாழாக்க எப்படி அந்த அமைப்புக்கு அனுமதி அளித்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
‘யுனெஸ்கோ’ அமைப்பால் உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயிலைப் பாழாக்கும் வகையில் நடக்கும் இந்த முயற்சியைத் தமிழக அரசு தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.