தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீக்கப்பட்டதால் பட்டி தொட்டியெங்கும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கோமாபுரம், மருதன்கோன் விடுதி, ஆதனக்கோட்டை, இலுப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உரிய உடற்தகுதி தேர்வு நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டோம், விதிமுறைகளை சரியாக கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் சில ஆக்ரோ‌ஷமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. தொடர்ந்து அந்த காளைகள் களத்தில் நின்று விளையாடி தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டியடித்தது.

இருப்பினும் களத்தில் வீரத்துடன் நின்றிருந்த மாடு பிடிவீரர்கள் தன்னை விரட்டிய காளையை விடாப்பிடியாக நின்று அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கி வெற்றிக்கொடி நாட்டிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பீரோ, சேர், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. களத்தில் வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாக இறக்கி விடப்பட்டனர். முதல் கட்டமாக 168 பேர் களம் இறங்கினர்.

ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் கண்காணித்தனர்.

இதே போல் ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக தயார் நிலையில் இருந்து மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news