தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவர்.
இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை போன்ற இடங்களில் தொழில் செய்து வருகின்றனர்.
தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இவர்களில் சிலர் திருவிழாவின் 10 நாட்களும், பலர் கடைசி 5 நாட்களும் என தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் சொந்த ஊரில் இருந்தபடி அம்மனுக்கு வேடமணிந்து தசரா குழுக்களில் பங்கேற்று விட்டு திருவிழா முடிந்ததும் தாங்கள் தொழில் செய்து வரும் ஊர்களுக்கு திரும்புவர்.
இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தலின்படி சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தசரா திருவிழா முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு திரும்பும் வகையில் அக்டோபர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, குலசேகரபட்டினத்துக்கு ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும், tnstc எனப்படும் செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.