தங்க முதலீட்டுப் பத்திரத்தை இருக்கன்குடி, மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்தல் பணிக்காக தமிழ்நாட்டின் சென்னை பகுதி, திருச்சிராப்பள்ளி பகுதி மற்றும் மதுரை பகுதி ஆகிய மூன்று பகுதிகளில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மண்டலம்-திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையிலும், திருச்சி மண்டலம்-சமயபுரம், மாரியம்மன் கோவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு தலைமையிலும், மதுரை மண்டலம்-இருக்கன்குடி, மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா தலைமையிலும், குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் 13.10.2021 அன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

நீதிபதி தலைமையில் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்பட்டு, 27250.500 கிராம் எடையுள்ள பல மாற்றுப்பொன் இனங்கள் 1.4.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச் சென்று, அதனை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றும் பொருட்டு சாத்தூர் கிளை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட பொன் இனங்கள் 18.4.2022 அன்று மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் வங்கி அதிகாரிகள் மற்றும் நீதிபதி தலைமையிலான குழுவின் முன்னிலையில் சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. கிளையில் கடந்த 29.4.2022 அன்று நிரந்தர முதலீடு செய்யப்பட்டது.

அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இதன் மூலம் ஆண்டிற்கு இருபத்தி நான்கு லட்சம் ரூபாய் வட்டித் தொகையாக கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. மேற்படி தங்க முதலீட்டுப் பத்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கன்குடி, மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் இன்று ஒப்படைத்தார். இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை அந்தந்த கோவிலின் திருப்பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மாலா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools