அ.ம.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை விமர்சித்து பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனை அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். பின்னர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பேட்டியளித்து வந்தனர்.
இதற்கிடையே அ.ம.மு.க.வில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன், மீண்டும் அதிமுகவில் இணைவார் என கூறப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் செந்தில்பாலாஜி பாணியில், தங்க தமிழ்செல்வன் தேனியில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அ.ம.மு.க.வில் இருந்து செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன் ஆகியோர் விலகி தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது..