X

தங்கல்’ இயக்குநரின் ’சிச்சோரே’ மாபெரும் வெற்றி

தேர்வில் தோல்வி அடைந்த மகனை வாழ்க்கையில் வெற்றிபெற செய்த தந்தையின் கதை தான் ’சிச்சோரே’. வழக்கமாக தமிழ் படங்களை பார்க்கும் நாம், பிற மொழிகளில் வரும் படங்களை கவனிக்க தவறுகிறோம். பிற மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பின்னர் தான் அதை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதே சினிமா விரும்பிகளின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான ’சிச்சோரே’ என்ற இந்தி படத்தை பற்றி இப்போது பார்ப்போம்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகனாகவும், ஷ்ரத்தா கபூர் நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் பிரதிக் பாபர், வருண் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் பிரீத்தம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அமலேண்டு சவுத்திரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதைப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணமாகி, கல்லூரி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக நாயகனும், நாயகியும் பிரிந்து வாழ்கிறார்கள். நாயகன் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தேர்வு முடிவுக்காக மிக பதற்றத்தோடு காத்திருக்கும் மகன், தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதனால் பெரிதும் மனமுடைந்து போன நாயகன், தனது கல்லூரி அனுபவங்களை தன் மகனிடம் பகிர்ந்து கொள்கிறார். நாயகி மற்றும் அவருடைய நண்பர்களின் துணையுடன் தனது மகனை மீண்டும் புத்துணர்வோடு ஊக்குவித்து கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார்கள். இதில் நாயகனுடைய கல்லூரி வாழ்க்கை மிகவும் நகைச்சுவையாகவும், அதே சமயத்தில் தேர்வில் தோல்வி என்பது முடிவல்ல, அது வெறும் பாடம் என்று எடுத்துக்கொண்டு, முனைப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷங்களும், வெற்றியும் தேடி வரும் என்பதை சொல்லும் படம் தான் சிச்சோரே.

வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் குழந்தைகளுக்கு போதிக்கும் பெற்றோர்கள், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்று எப்போதாவது அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்களா?

முயற்சியும் பயிற்சியும் இடைவிடாமல் கொண்டோரின் தோல்வி வெற்றிக்கும் சமானம் என்று புரிய வைத்திருக்கிறார்களா? இந்த கேள்விகளைப் சிச்சோரே படம் மூலம் பலமாக எழுப்பியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.