தங்கம் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஏற்றம் அடைந்து வரலாறு காணாத அளவுக்கு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.
போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன் பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பல நாடுகளும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதையும், சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தின.
இதனால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு நிலவியது. எனவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். எனவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு பவுனுக்கு ரூ.32 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.73-ம், பவுனுக்கு ரூ.584-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 51-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 408-க்கும் விற்பனையானது.
இன்று கிராமுக்கு மேலும் 21-ம், பவுனுக்கு ரூ.168-ம் அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 72-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 576-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.52 ஆயிரத்து 400-க்கும், கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.52.40-க்கும் விற்பனை ஆகிறது.