தங்கம் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.616 உயர்வு
தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 663-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 304-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலை இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.38 ஆயிரத்தை கடந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது. கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் அதிகரித்து, ஒரு கிராம் 68 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.68 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்படும் நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,728 வரை உயர்ந்திருக்கிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ரஷியா-உக்ரைன் இடையே போர் நிகழும் சூழல் இருந்து வருவதாலும், இந்த 2 நாடுகளுக்கு சீனாவும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வருவதாலும், 3-ம் உலக போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் காரணமாக, உலக பொருளாதாரம் மந்தநிலை அல்லது வீழ்ச்சி அடையலாம் என்ற எண்ணத்தில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் அதன் விலை உயருகிறது.
ரஷியா-உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பொறுத்து, தங்கம் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கம் காணப்படும். ஆனால் இப்போதுள்ள நிலைமையை பார்க்கும் போது, தங்கம் விலை அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.