தங்கம் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளது – திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பேட்டி

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். காணிக்கையாக செலுத்தப்படும் பணம் அவ்வப்போது கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். தங்கம், வெள்ளி பொருட்கள் பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 3 கணக்கு தணிக்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நகைகள் ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அறையில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமானதாக தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அந்த அறையில் சோதனை நடத்தினர்.

அப்போது தங்கம் வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்களின் கணக்கு விவரங்கள் பல ஆண்டுகளாக முறையாக தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கணக்கு தணிக்கை அதிகாரிகள் மீண்டும் அந்த அறையில் சோதனை நடத்தி தங்கம், வெள்ளி உள்பட பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்து தேவஸ்தானத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து, நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆரன்முளையில் பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாகவே உள்ளது. இதில் இருந்து ஒரு கிராம் தங்கம் கூட மாயமாகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news