Tamilசெய்திகள்

தக்காளி விலை வீழ்ச்சி – கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளில் ரூ.6 க்கு விற்பனை

காய்கறி வகைகளை பொறுத்தவரையில் வெயில் காலத்தில் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு, விலை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு அது தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. காய்கறி விளைச்சல் அதிகரிப்பால், வரத்து உயர்ந்து, விலை குறைந்துள்ளது.

கோடைகாலத்தில் காய்கறி விலை குறைந்திருப்பது இந்த ஆண்டில் தான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் தக்காளியை பொறுத்தவரையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே வீழ்ச்சி அடைந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. பின்னர், மேலும் விலை குறைந்து கடந்த வாரத்தில் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டு, நேற்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை ஆனது.

நவீன் தக்காளி என்று கூறப்படும் பெங்களூரு தக்காளி மட்டும் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து இருக்கிறது. நாளொன்றுக்கு 1,100 டன்களில் வரத்து இருந்த தக்காளி, தற்போது 1,400 டன் முதல் 1,500 டன் வரை வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் விலை குறையவே வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெயில் காலம் முடிந்து, மழை காலம் ஆரம்பித்ததும், தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் வரை விலை வீழ்ச்சி அடைந்துதான் காணப்படும் என தக்காளி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்திருந்தாலும், சில்லரை கடைகளில் அதைவிட கூடுதலாகவே விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதேபோல், பல்லாரி வெங்காயம், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்பட சில காய்கறி வகைகளின் விலையும் குறைந்திருக்கிறது.