இந்தியா முழுவதும் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த லாரிகள் மூலம் டோல்கேட் கட்டணம், சரக்கு போக்குவரத்து, வாகன பதிவுக்கட்டணம், தகுதிச்சான்று, வாகன உதிரிபாகங்கள், டீசல் விற்பனை என பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகள் தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இதற்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகுதிச்சான்று கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தகுதிச்சான்று கட்டண உயர்வுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை இன்னும் அமல்படுத்தாததால், ஏராளமான லாரிகள் தகுதிச் சான்று பெற முடியாமல், சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் லாரி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். தற்போது அந்தநிலைமை மாறி, லாரிகளுக்கு ஓரளவுக்கு சரக்குகள் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 15 ஆண்டுகளுக்கு மேலான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் வாகனங்கள் உடைக்கப்படும் என்றும், அந்த வாகனத்திற்கு உரிய தொகை நிர்ணயம் செய்து, உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் இறுதி வாரத்தில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது.
மார்ச் மாதம் வரை ஒரு லாரிக்கு தகுதிச்சான்று பெற கட்டணம் ரூ.850 ஆக இருந்தது. அது ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.13,500 என்று அதிகரித்தது. இந்த கட்டணம் உயர்வால் ஒன்றிரண்டு லாரிகளை வைத்து, அவர்களே டிரைவர்களாக இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் கட்டண உயர்வுக்கு நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் தடை உத்தரவு போட்டு பல மாதங்களாகிறது. ஆனால், இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தகுதிச்சான்று காலம் முடிந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தகுதிச்சான்று பெற முடியாமல், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தகுதிச்சான்று இல்லாததால் உரிமையாளர்கள் லாரிகளை இயக்க முடியாமல் உள்ளனர். இந்த லாரிகளை நம்பியுள்ள டிரைவர், கிளினீர், சுமை தூக்குவோர் வேலையிழந்துள்ளனர். உரிமையாளர்களுக்கு பல லட்சம் மதிப்பில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசு உடனடியாக அந்த உத்தரவை அமல்படுத்தி, லாரிகளுக்கு தகுதிச்சான்று பெற உரிய வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.