மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் புரொமோஷனுக்காக நடிகை திரிஷா மற்றும் ஜெயம் ரவி தங்களது பெயர்களை டுவிட்டரில் குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் என்று மாற்றினர். இதைத்தொடர்ந்து அவர்களது ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியான திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தது போல் மாற்றியிருக்கிறார், இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் கொடுக்கப்படவில்லை. டுவிட்டரின் புதிய விதிகளின் படி கணக்குகளின் பெயர்களை மாற்றியதால் இருவரும் தங்களது ப்ளூ டிக்கை பறிக்கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டின் போதும் இதே போல் தங்கள் கதாபாத்திரத்தின் பெயர்களை திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் மாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.