ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில் “ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.